சரியாக இரண்டாண்டுகளுக்கு முன்னர் நாங்கள் காஷ்மீருக்குச் சென்றிருந்தபோது அங்கே சற்று அமைதி திரும்பியிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹூரியத் அமைப்பு உள்ளிட்ட காஷ்மீர இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட்டிருந்தது. ஆஸாதி (விடுதலை) என்கிற கோரிக்கையை அவர்கள் விட்டுவிடவில்லையாயினும் போராட்டம் மக்கள் மயப்பட்டிருந்தது. அமைதி வழிப் போராட்டம் முதலான சொல்லாடல்கள் யாசின் மாலிக் போன்றோரின் உதடுகளிலிருந்தும் உதிர்ந்தன. எனினும் இந்நிலையைத் தக்க வைக்கும் பொறுப்பு இந்திய அரசிடம் உள்ளது. இந்திய அரசோ அந்தப் பொறுப்பை உணர்ந்ததாகத் தெரியவில்லை. பிரிவினை கோருபவர்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்துதல், நிறுத்தி வைத்திருக்கும் ஏழு லட்சம் இந்தியப் படைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக் கொள்ளுதல், ஆயுதப் போராட்டச் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறுதல், மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல், முறையான தேர்தல் மூலமான நல்லாட்சி வழங்குதல் முதலியவற்றினூடாகவே அங்கு அமைதி தொடர முடியும் என்கிற எச்சரிக்கையோடுதான் காஷ்மீர்ப் பயணம் குறித்த என் நூலும் முடிந்தது.
ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் என்ன நடந்தது? கருத்துக் கணிப்பு குறித்த வாக்குறுதியை நிறைவேற்றுதல், 370வது பிரிவு வழங்கியுள்ள சிறப்புரிமைகளை அம்மக்களுக்குத் திரும்பி அளித்தல் முதலான கோரிக்கைகளைக்கூட விட்டுவிடுவோம், மேலே குறிப்பிட்டுள்ள மிகவும் அடிப்படையான அம்சங்களிலும்கூட இந்திய அரசு நீதியாய் நடந்து கொள்ளவில்லை. காஷ்மீர் இயக்கங்களின் கூட்டமைப்பின் தேர்தல் புறக்கணிப்பு அழைப்பை மீறி அங்கே கடந்த சில தேர்தல்களைக் காட்டிலும் மக்கள் அதிக அளவில் வாக்களித்ததை இந்திய அரசு தவறாகப் புரிந்து கொண்டது. அன்றாடப் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஒரு உள்ளூர் நிர்வாகம் தேவை என்கிற அளவில் மட்டுமே மக்கள் தேர்தலில் பங்கேற்றனர், அதுவுங்கூட ஸ்ரீநகர் முதலான பகுதிகளில் மிகக் குறைந்த வீதத்திலேயே வாக்குப்பதிவு நடந்தது என்பதை எல்லாம் இந்திய அரசு மறந்தது.
செல்போனில் ‘கேம்ஸ்’ விளையாடிக் கொண்டே சந்திக்க வந்தவர்களிடம் பேசுகிற விளையாட்டுப் பிள்ளையான உமர் அப்துல்லா பதவி ஏற்ற சில நாட்களில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கப்படும் என்றார். சென்ற இரு வாரங்களுக்குமுன் இந்திய இராணுவ தளபதி வி. கே. சிங், “ அரசியல்வாதிகள் தங்கள் நோக்கங்களுக்காக இப்படி எல்லாம் வாக்குறுதி அளிக்கிறார்கள். இது நடைமுறைச் சாத்தியமில்லை" எனச் சொன்னது குறிப்பிடத்தக்கது பா.ஜ.க இதைத் தினந்தோறும் சொல்லிக் கொண்டிருக்கிறது. காங்கிரசின் கருத்தும் அதுவாகத்தான் உள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தன. பதவி உயர்வுக்காகவும், ரொக்கப் பரிசுகளுக்காகவும் அப்பாவி இளைஞர்கள் சுடப்பட்டு தீவிரவாதிகள் எனப் பெயர் சூட்டப்படுகிற உண்மைகள் வெளிவந்தபோது அந்த இராணுவ அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க அரசு மறுத்தது. ”ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமும் போலி மோதல் கொலைகளும் ரொக்கப் பரிசு பெறவும், பதவி உயர்வு அடையவும் இராணுவத்தால் பயன்படுத்தப் படுகின்றன “ என ஜம்மு- காஷ்மீர் மாநில மனித உரிமை ஆணயம் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியபோதும்கூட அரசு கண்டு கொள்ளவில்லை. 2000 த்தில் பத்ரிபால் என்னுமிடத்தில் ஐந்து அப்பாவி சிவிலியன்களைக் கொன்ற இராணுவ அதிகாரிகள்மீது சி. பி. ஐ குற்றப் ப்த்திரிக்கை தாக்கல் செய்திருந்தும்கூட அவர்கள் மீது விசாரணை மேற்கொள்வதற்கு இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை. (ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் செயல்படும் இடங்களில் அப்படியான அனுமதியை அரசு வழங்க வேண்டும்). ஏன் இந்த நிலை என சித்தார்த் வரதராஜன் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேருக்கு நேர் வினவியபோது அவரால் மவுனத்தை மட்டுமே பதிலாகத் தர முடிந்தது (இந்து, ஜூன் 4, 2010).
இதற்கிடையில் ஹுரியத் அமைப்பில் ஏற்பட்டிருந்த ஒற்றுமை சிதைந்தது. உமர் அப்துல்லா அரசால் இராணுவத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க இயலாத நிலை தொடர்ந்தது. கல்வி, வேலையின்மை என எந்தத் திசையிலும் முன்னேற்றமில்லாத நிலையிலும் எந்தமாற்றமும் இல்லை. இந்தச் சூழலில்தான் சென்ற 2009 மே 29 அன்று இரவு ஷோபியான் என்னுமிடத்தில் நிலோபர் ஜான், ஆசியா ஜான் என்கிற இரு காஷ்மீர இளம் பெண்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். இராணுவம் தனக்குத் தொடர்பில்லை எனக் கூறியபோதும் அப் பெண்களின் குடும்பத்தார் அவர்கள் இருவரும் இராணுவத்தால் வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டினர். இது மிகப் பெரிய எழுச்சி ஒன்றைக் காஷ்மீர் முழுவதும் உருவாக்கியது. நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையம், தடயவியல் ஆய்வுகள் எல்லாமும் முழுமையாக உண்மையை வெளிக்கொணர இயலவில்லை. அரசும் இராணுவமும் குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைவதாகவே மக்கள் கருதினர். போராட்டம் தொடர்ந்ததால் இரண்டாம் முறையும் அவர்கள் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன. இரண்டாம் முறை உடல் பரிசோதனை செய்யப்பட்டபோது பெரிய அளவில் மக்கள் திரண்டு கல் வீசி மருத்துவமனைக் கண்ணாடிகளை உடைத்தனர். உறவினர்கள் கண் முன்பே பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எற்கப்பட்டது. பரிசோதனையின்போது மருத்துவரும் போலீஸ் அதிகாரியும் வன்புணர்ச்சி செய்யப்பட்டது உண்மையே எனக் கூறினர். இருந்தபோதிலும் தொடர்ந்து ஆதாரங்களை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை ஊடகங்கள் வெளிப்படுத்தின.
இந்தப் பின்னணியில்தான் சென்ற ஏப்ரல் 27ல் குப்வாரா பகுதியில் உள்ள மச்சில் என்கிற ஊரைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை தினம் 500 ரூ ஊதியத்தில் வேலை பெற்றுத் தருவதாகச் சொல்லி, மேஜர் உபேந்திர குமார் தலைமையில், நான்காம் ரஜபுத்திரப் படைப் பிரிவைச் சேர்ந்த சில படையினர் அழைத்துச் சென்றுள்ளனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கள் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் வைத்துக் கொல்லப்பட்டனர். ஊடுருவிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக வழக்கம்போல இராணுவம் அறிவித்தது. எனினும் இது ஒரு அப்பட்டமான கொலை என்பது மிக விரைவில் தெரிய வந்தது. மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நீதியரசர் பஷிருதீன் வெளியிட்ட அறிக்கையில் இக் கொலைகள் மூன்றும் பரிசு பெறும் நோக்குடனேயே மேற்கொள்ளப் பட்டன என்பதை உறுதிப் படுத்தினார். ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை உடனடியாக நீக்காவிட்டால் மக்கள் மேலும் அந்நியப்படக் கூடிய நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
காஷ்மீர் முழுவதும் இந்நிகழ்வு மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. மேஜர் உபேந்திர குமார் மற்றும் அப் படைப் பிரிவின் தலைவர் டி. கெ. பதானியா இருவரும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்ட போதும் மக்களின் கோபம் தீரவில்லை. இம்முறை தொடங்கிய மக்கள் போராட்டம் சில வித்தியாசமான பரிமாணங்களைக் கொண்டிருந்தது. நகர்ப்புறங்களச் சேர்ந்த முப்பது வயதுக்கும் உட்ப்பட்ட இளைஞர்கள் இதில் முன்னணியில் இருந்தனர். எதிர்ப்பு ஆயுதப் போராட்டமாக வடிவெடுக்கவில்லை. அதே நேரத்தில் மரபு வழிப்பட்ட முழக்கப் போராட்டம், உண்ணவிரதம் முதலான வடிவங்களிலும் இல்லை. தன்னெழுச்சியான தெருச் சண்டையாக அது வடிவெடுத்தது. இளைஞர்கள் திரண்டு நின்று ஆயுத்ம் தாங்கிய படைவீரர்கள் மீது கற்களை வீசித் தாக்கினர்.
இந்தத் தெருச் சண்டையை உள்ளூர்ப் போலீசை வைத்துச் சமாளிக்காமல் சி.ஆர்.பி.எஃப் படையினரை அரசு ஏவியது. செக்கும் தெரியாது சிவலிங்கமும் தெரியாது என நம்மூரில் ஒரு பழமொழி சொல்வார்களே அதுபோல கொலை ஆயுதங்களைத் தாங்கிய இந்தத் துணை இராணுவப் படையினர் கல் வீசுகிறவர்களையும் அப்படியே எதிர் கொண்டனர். மச்சில் இளைஞர்களின் கொலையைக் கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டங்களில் துணை இராணுவம் சுட்டதில் இளைஞர்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர். சோபூரில் தஜ்முல் பஷீர் என்கிற 17 வயது இளைஞன், பாரமுல்லாவில் ஆசிஃப் ஹஸன் ராதர் என்கிற 9 வயதுச் சிறுவன் ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடக்கம். இந்தக் கொலைகளைக் கண்டித்து நடத்தப்பட்ட ஊர்வலங்களல் மறுபடி கல்லெறி, துப்பாக்கிச் சூடு, மீண்டும் இளைஞர்கள் கொல்லப்படுதல் தொடர்ந்தன. தஜ்முல் பஷீரின் கொலையைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பிலால் அகமது வாணி என்கிற 22 வயது இளைஞன் கொல்லப்பட்டான்.
உமர் அப்துல்லாவின் கட்டுப்பாட்டில் துணை இராணுவம் செயல்படவில்லை.அது சுதந்திரமாக இயங்கியது. “என்ன செய்வது சி.ஆர்.பி.எஃப் படையினர் ஆயுதம் தாங்கிய எதிரிகளைக் கொல்வது என்கிற மனநிலைக்கே பழக்கப்பட்டுள்ளனர்” என அலுத்துக் கொண்டார் உமர் அப்துல்லா. பெற்றோர்களை நோக்கி, “உங்களை கை எடுத்துக் கும்பிடுறேன். உங்கள் பிள்ளைகளைக் கொஞ்சம் வீட்டுக்குள்ளேயே வைத்திருங்கள்” எனவும் வேண்டிக் கொண்டார்.
ஆனால் இந்த இளைஞர்கள் யாருடைய சொல்லையும் கேட்கத் தயாராக இல்லை. உள்ளூர் எம்.பிக்கள், எம்.எல். ஏக்கள் எல்லாம் பெரும்பாலான மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. வெறும் ஒற்றைச் சத வாக்குகளப் பெற்று ‘வெற்றி’ பெற்ற இவர்களின் சொல்லை யார் மதிப்பார்கள்? ஹூரியத் தலைவர்களுங்கூட ஒரு வகையில் செல்வாக்கு இழந்திருந்தனர். இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு முக்கியத்துவம் அளிக்கும் மீர்வாஸ் உமர் ஃபாரூக் அந்த வகையில் எதையும் சாதிக்க இயலாததால் அவரிடம் மக்களுக்கு ஏமாற்றம். அப்படியான ஒரு நிலையை ஏற்படுத்தியதற்கு இந்திய அரசே பிரதான காரணம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
’கடினப் போக்குடையவர்’( hardliner) என அழைக்கப்படும் சையத் அலி ஷா கீலானியின் வேண்டுகோளையும் இளைஞர்கள் புறக்கணித்தனர். வேறு வழியின்றி அவர் இளைஞர்களின் வழிக்குத் திரும்ப நேரிட்டது. வேலை நிறுத்தம், சிவில் ஊரடங்கு, இட்கா சலோ என ஒரு போராட்ட அட்டவணையை அவர் அறிவித்தார். காஷ்மீர் எங்கும் ”Go India Go”, “Quit India” (காஷ்மீரைவிட்டு வெளியேறு, இந்தியாவே வெளியே செல்) முதலான முழக்கங்கள் ஒலித்தன. சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
துணை இராணுவத்தைப் பயன்படுத்துவது போதாதென இந்திய அரசு இராணுவத்தையும் களத்தில் இறக்கியது. ஜூலை7 அன்று எட்டு படைப் பிரிவுகள் ஸ்ரீநகரில் கொடி ஊர்வலம் நடத்தின. வெள்ளையர் ஆட்சியில் கலகம் செய்கிற மக்களை அச்சுறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நடைமுறையை இந்திய அரசு தொடர்ந்து கையாண்டு வருகிறது. மாவோயிஸ்டுகளை எதிர்க்க இராணுவத்தை இறக்குவது என்கிற கருத்து கடும் எதிர்ப்புக்குள்ளாகி சிதம்பரமும் மன்மோகனும் இந்த முயற்சியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் காஷ்மீரில் இராணுவத்தை இறக்க அவர்கள் தயங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதற்கு இந்திய அளவில் பெரிய எதிர்ப்பு இருக்காது என அவர்கள் நம்புகிறார்கள். ஏன்? சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக இராணுவத்தை இறக்கக் கூடாது என்பதில் ஒரு கருத்தொருமிப்பு இருக்குமானால் அது காஷ்மீருக்கும் பொருந்துந்தானே? ஒரு வேளை காஷ்மீரப் பள்ளத்தாக்கு மக்களைச் சொந்த நாட்டு மக்கள் என இந்திய அரசும் சிதம்பரம் வகையறாக்களும் கருதவில்லையா?
தெருச் சண்டையில் இறங்கியுள்ள காஷ்மீர இளைஞர்கள் முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள். விவரமறிந்த வயதிலிருந்து இராணுவ கெடுபிடிகளுக்கிடையில், கடும் அடக்குமுறை, மனித உரிமை மீறல்கள் மத்தியில் வளர்ந்தவர்கள். வாழ்வின் பாதி நாட்களை ஊரடங்கு வாழ்வில் கழித்தவர்கள். வெடிச் சத்தத்தைக் கொண்டே இது எஸ்.எல். ஆரா இல்லை ஏ.கே ரகத் துப்பாக்கியா என இவர்கள் சொல்லி விடுவார்கள் என ஸ்ரீநகரில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களப் பார்த்து பேரசிரியர் கீலானி சொன்னது நினைவுக்கு வருகிறது. இத்தகைய அனுபவங்களின் விளைவாக காஷ்மீர இளைஞர்களில் 40சதத்தினர் மனப் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதை ஒரு ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. இவர்களின் இந்த எதிர்ப்பு பல மட்டங்களிலிருந்து எழுகிறது. கடந்த 60 ஆண்டு கால வரலாறு, 20 ஆண்டு கால ஆயுதப் போராட்டம் மற்றும் அடக்குமுறை, மாநில அரசுகளின் செயலின்மை, ஆக்கிரமிப்பு இராணுவத்தின் மத்தியில் வாழ நேர்ந்த அவலம், கேள்விக்குறியான எதிர்காலம், வேலையின்மை முதலான பொருளாதாரப் பிரச்சினைகள் எனப் பலபடித்தான காரணங்கள் இன்றைய எதிர்ப்பின் பின்புலமாக இருப்பதை அரசு விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஆனால் அரசு இந்த நோக்கில் சிந்தித்துப் பிரச்சினையை அணுகத் தயாராக இல்லை. வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது, லக்ஷர்-ஏ- தொய்பா பின்னணியில் உள்ளது, கல்லெறிவதற்கு ஊதியம் வழங்கப்படுகிறது முதலான ‘காரணங்களையே’ உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா, சிதம்பரம், இராணுவத் தளபதி வி. கே. சிங் முதலானோர் கூறுகின்றனர். கல்லெறியும் இளைஞர்களுக்குப் போதை மருந்துகள் வாங்கித் தரப்படுகிறது எனப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தவும் அவர்கள் தயங்கவில்லை. இதன் மூலம் போராட்டத்தின் அரசியல் நியாயங்களை மறைப்பதோடு, கல்லெறியும் இளைஞர்கள் முன் துப்பாக்கிகளை உயர்த்துவதற்கும் நியாயம் கற்பிக்கின்றனர்.
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஜூன் மாதம் வரையிலும் மட்டும் 32 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் எனக் கொல்லப்பட்ட 107 பேர்கள் இந்தக் கணக்கில் சேராது. எல்லாவிதமான அடக்குமுறைகளையும் அரசு கையாள்கிறது. பத்திரிக்கையாளர்கள் மீதான அடக்குமுறையை ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் உள்ளபோது வழக்கமாகப் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டையும் இம்முறை அரசு ரத்து செய்தது. ஆக ஊரடங்கின்போது செய்தி சேகரிக்க, படம் எடுக்க வரும் பத்திரிகையாளர்களை இராணுவம் கொல்லலாம். 12 புகைப்படக்காரர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பத்திரிகைத் தணிக்கை தவிர உள்ளூர்ப் பத்திரிக்கைகளைத் தடை செய்யும் அளவிற்கும் அரசு சென்றது. சென்ற ஜூலை 8 அன்று உள்ளூர்ப் பத்திரிக்கைகள் எதுவும் வரவில்லை.
இன்னொரு பக்கம் லாரி ஓட்டுனர்களைப் போராட்டக்காரர்கள் தாக்குகிறார்கள் எனக் காரணம் சொல்லி ஜம்முவிலிருந்து காஷ்மீரப் பள்ளத்தாக்கிற்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வருகிற லாரிகளை நிறுத்திப் பள்ளத்தாக்கு மக்கள்மீது மீண்டும் ஒரு பொருளாதாரத் தடை விதிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. ‘ஜம்மு- காஷ்மீர் ஆயில் டேங்கர் அசோசியேஷன்’ தலைவரும் ‘கிரந்தி தள்’ என்கிற இந்துத்துவ அமைப்பின் பொருளாளருமான அனந்த் சர்மா என்பவர் இந்தப் பொருளாதாரத் தடையை முன்னின்று செயல்படுத்தினார். அரசும் கண்டுகொள்ளாமல் இருந்தது. ‘குரு மன்யோ கிரந்த் சொசைடி’ என்கிற சீக்கிய அமைப்பு ஆனந்த் சர்மாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. பெரும்பாலான ஓட்டுனர்கள் சீக்கியர்களாகவும், முஸ்லிம்களாகவும் உள்ளபோது காஷ்மீர மக்கள் அவர்களை ஏன் தாக்கப் போகிறர்கள் என அது வினவியுள்ளது.
அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ளாதவரை காஷ்மீரில் அமைதி உருவாகப் போவதில்லை. மீண்டும் பெரிய அளவில் தீவிரவாதம் உருப்பெறுவதற்கு அரசே காரணமாகிவிடக் கூடாது. தேர்தல் நடத்துவதும், ஆட்சி அமைப்பதும் மட்டும் ஜனநாயகம் அல்ல .ஆக அடிப்படையான உயிர் வாழும் உரிமை, அமைதியாக எதிர்ப்புகளைக் காட்டும் உரிமை ஆகியவற்றைக்கூட மறுத்துவிட்டுப் பின் ஜனநாயகம் என்ன வேண்டி இருக்கிறது?
மேலே உள்ளது ‘சமுதாய ஒற்றுமை’ என்கிற மாத இதழுக்காகச் சென்ற மாத இறுதியில் எழுதியது. அனைத்துக் கட்சிக் கூட்டமெல்லாம் நடத்தி ஓரளவு அமைதியைக் கொண்டு வந்துவிட்டதாக அரசு நினைத்தது. காஷ்மீர்ப் பிரச்சினையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் எல்லோரும் இது எத்தனை அபத்தம் என்பதை உணர்ந்தே இருந்தோம். காஷ்மீரில் இறந்து போகிற இளைஞர்களுக்காகத் தான் மனம் நொந்து போவதாக சிதம்பரம் நீலிக் கண்ணீர் வடித்தபோது இது எத்தனை பெரிய அயோக்கியத்தனம் என்கிற எண்ணம்தான் எல்லோருக்கும் மேலிட்டது. ஆனால் ஆட்சியாளர்கள் இது பற்றியெல்லாம் கவலைப்படாமல் வசனம் பேசிக் கொண்டிருந்தார்கள். காஷ்மீர மக்களுக்குப் பெரீய்ய பொருளாதாரப் ‘பேக்கேஜ்’ ஒன்று தரப் போவதாகச் சொல்லிப் புன்முறுவலித்தார் மன்மோகன். இது மீண்டும் காஷ்மீர மக்களை அவமானப் படுத்துவதாகவே அமைந்தது. காஷ்மீர மக்கள் போராடுவது அப்பட்டமான அராசியல் காரணங்களுக்காக. அதை இப்படி வெறும் பொருளாதாரக் காரணங்களாகச் சுருக்கியபோது அம்மக்கள் மேலும் வெகுண்டனர். இதற்கிடையில் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் ஒரு பா.ஜ.க குழு மன்மோகனைச் சந்தித்து எக்காரணம் கொண்டும் ஆயுதப் படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கூடாது என வேண்டிக் கொண்டது.
சிதம்பரம் நம்பியதுபோல போராட்டம் ஸ்ரீநகர், பாரமுல்லா, சோபோர் முதலான நகர்ப்புறங்களோடு நின்றுவிடவில்லை. கிராமப் பகுதிகளுக்கும் பரவியது. இளைஞர்கள் மட்டுமின்றி பெண்களும் தலைகளில் குடங்களுடனும், கைகளில் கற்களுடனும் சாலைகளில் திரண்டனர். மருத்துவமனைகளில் இருப்போருக்கு இரத்த தானம் அளிக்க முகாம்கள், பெரிய அளவில் சமூக உணவுக் கூடங்கள் என்பதாகப் போரட்டம் ஒரு மக்கள் திரள் வடிவெடுத்திருப்பதை உலகமே வியப்புடன் பார்க்கிறது.
இன்றைய பத்திரிகைச் செய்திகளின் படி நேற்றுவரை(ஆக 10) இந்த 60 நாட்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 51. பெரும்பாலும் இளைஞர்கள், சிறுவர்கள். நேற்று சையத் ஃபரூக் புஹாரி என்கிற 19 வயது இளைஞனின் உடலை ஒரு சிற்றோடையிலிருந்து எடுத்துள்ளனர் .பாரமுல்லா மாவட்டத்திலுள்ள கிரீரி என்னுமிடத்தைச் சேர்ந்த ஃபரூக் முதலாமாண்டு பட்டம் படித்துக் கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவன். 13 நாட்களுக்கு முன் போலீஸ் அவனைப் பிடித்துச் சென்றுள்ளது. கைகளையெல்லாம் ஒடித்துக் கடும் சித்திரவதைக்குப் பின் அவன் கொல்லப்பட்டுள்ளான். இன்னொரு பக்கம் ஸ்ரீநகர் நவ்ஹாட்டா பகுதியில் அமைதியாகச் சாலையில் அமர்ந்து தொழுகைப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி மூவர் காயமடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் மன்மோகன் புதுடெல்லியில் தனது வீட்டில் காஷ்மீரக் கட்சிகளின் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். வழக்கமான பசப்பல்களுடன் அவர் பேச்சு அமைந்துள்ளது. காஷ்மீரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டுமாம்; வேலை வய்ப்பை அதிகரிப்பது குறித்த ஆலோசனை கூற முன்னாள் ரிச்ர்வ் வங்கித் தலைவர் ரங்கராஜன், இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தி முதலியோர் அடங்கிய குழு ஒன்றை அமைக்கிறாராம். சையத் அலி ஷா கீலானி, மீர்வாஸ் உமர் ஃபாரூக் முதலான தலைவர்கள் எல்லோரும் இதை நிராகரித்துள்ளனர். எங்கள் கோரிக்கையை பொருளாதாரமாகச் சுருக்காதீர்கள் என ஒத்த குரலில் கூறியுள்ளனர்.
ஆயுதப் படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறு பரிசீலனை செய்யலாம் (அதுகூட மறு பரிசீலனைதான், நீக்குவது அல்ல) எனப் பெரிய மனது பண்ணிச் சொல்லியிருந்த போதிலும், அதிகாரப் பகிர்வைப் பொருத்தமட்டில் கருத்தொருமிப்பு வந்தால்தான் அது சாத்தியம் என்றொரு இக்கு வைத்துள்ளார் மன்மோகன். கருத்தொருமிப்பு சாத்தியம் இல்லை என்பதை மனதிற் கொண்டே இப்படிச் சொல்லியுள்ளார். ஆக நமது ஆட்சியாளர்கள் இம்மியும் திருந்தப் பொவதில்லை. இன்றையப் போரட்டத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளப் போவதில்லை. உமர் அப்துல்லாவை ஓரம்சத்தில் பாராட்ட வேண்டும். “ இந்தப் போராட்டம் யாராலும் தலைமை தாங்கப்படவில்லை. இதற்குப் பின்னணியில் யாரும் இல்லை “ எனச் சில நாட்களுக்கு முன் உண்மையை ஒத்துக் கொண்டுள்ளார். “ இப்படியான ஒரு போராட்டத்தைக் காஷ்மீர் இதுவரை கண்டதில்லை. அது செல்லும் திசையை யாராலும் சொல்ல முடியவில்லை. யார் சொல்லியும் அதை நிறுத்த முடியாது.” என்கிறர் சஜ்ஜத் கனி லோனே. ஏனெனில் இது யார் சொல்லியும் தொடங்கியதல்ல. இந்திய அரசு இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த அம்சத்தில்தான் அது ஒரு மிகப் பெரிய சவாலை எதிர் கொள்கிறது. யாராவது தலைவர்கள் காரணமாக இருந்தால் அவர்களைக் கைது செய்தோ, ஏதாவது ஒரு இயக்கம் பின்னணியில் இருந்தால் அந்த இயக்கத்தின்மீது அடக்குமுறையை ஏவியோ போராட்டத்தை நசுக்க முயற்சிக்கலாம். இந்தப் போராட்டத்தை எப்படி அடக்கப் போகிறீர்கள்? ஒரே வழி பின்னணியாக உள்ள அரசியல் கோரிக்கையைத் தீர்ப்பதுதான் என்பதை உணர்வீர்களா?
- ஆகஸ்ட் 11, 2010 காலை 10 மணி
இக் கட்டுரையை லும்பினிக்கு அனுப்புவதன் முன்னதாக மன்மோகனின் நேற்றையப் பேச்சை முழுமையாகப் படித்து விடலாமென ‘கிரேட்டர் காஷ்மீர்’ நாளிதழின் இணையத் தளத்திற்குச் சென்றேன். மதியம் 12 மணிச் செய்தி ஒன்று அதில் ஏற்றப்பட்டிருந்தது. கிரீரியில் ஃபரூக்கின் உடல் அடக்க நிகழ்வில் ஏராளமான மக்கள் கூடி இந்திய எதிர்ப்பு முழக்கங்களை இட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்காக பல்ஹாலனிலிருந்து வந்த ஊர்வலத்தில் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசியதில் மூவர் காயமடைந்துள்ளனர். ரஜவ்ரியில் படைப் பிரிவு ஒன்றின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இடையில் சிக்கிக் கொண்ட இரு பெண்கள் இறந்துள்ளனர். இரு இராணுவ வீரர் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளனர். ஆக கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 53 ஆகியுள்ளது..
இந்திய அரசு இதைத்தான் எதிர்பார்த்துக் காத்திருந்ததா?
கடைசியாக லும்பினி வாசகர்களுக்குச் சிந்திக்க ஒரு குறிப்பு:
இவ்வளவு ஆகியும் உலக நாடுகள் ஏன் வாய் திறக்கவில்லை? சித்தார்த் வரதராஜன் சுட்டிக் காட்டியிருப்பதுபோல ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னாக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? உலக நாடுகள் இந்தியாவைக் கண்டித்திருக்காதா? இன்று ஏன் இந்த நிலை? இடையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடந்துள்ளன? லும்பினி வாசகர்கள் எழுதுங்களேன்.
- ஆகஸ்ட் 11, 2010, மதியம் 2 மணி
1 comment:
'இவ்வளவு ஆகியும் உலக நாடுகள் ஏன் வாய் திறக்கவில்லை? சித்தார்த் வரதராஜன் சுட்டிக் காட்டியிருப்பதுபோல ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னாக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? உலக நாடுகள் இந்தியாவைக் கண்டித்திருக்காதா? இன்று ஏன் இந்த நிலை?'
ஏனென்றால் சுதந்திர நாடாக காஷ்மீர், அதாவது இந்தியாவிலிருந்து காஷ்மீரை பிரித்து தனி நாடாக அங்கீகரிப்பது என்பதை ஆதரிக்க அவை தயாராக இல்லை. இந்தியாவை பகைத்துக் கொள்ள அவை விரும்பவில்லை. பாகிஸ்தானின் அடிவருடிகளுக்கும்,
இஸ்லாமிய அமைப்புகளுக்கு பல்லக்கு தூக்கும் பேர்வழிகளுக்கு இது புரிந்தால் சரி.உலகம் மாறிப் போச்சு மாமே.
Post a Comment
உரையாடல்கள்